ஆட்டுக்குட்டியும் ஓநாயும்- Geitekillingen

Foto: PixabayFortelling om en geitekilling som ville ikke høre mammaen sin

 

 

ஓர் ஊரில் ஓர் ஆடு தனது இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. அந்தக் குட்டிகளில் ஒன்று தாய் சொல்லைக் கேட்கும். சிறியகுட்டி அம்மா கூறுவதைக் கேட்காமல் தன் விருப்பப்படியே செய்யும். அம்மாஆடு தனது குட்டிகளுக்கு பல அறிவுரைகள் கூறியே வந்தது. குட்டிஆடு தான் சொல்வதைக் கேட்பதில்லையே என அம்மாஆடு வருந்தியது.
ஒரு நாள் ஓர் ஓநாய் இந்த இரண்டு குட்டிகளும் தனியாக நின்று புல் மேய்வதைக் கண்டது.

 

 

இவற்றைப் பிடித்து உண்பதற்காக வந்தது. அப்போது தாய்ஆடு ஓடி வந்து குட்டிகளைக் கூட்டிக்கொண்டு தனது இருப்பிடத்துக்கு ஓடி விட்டது.
அம்மாஆடு குட்டிகளிடம் ஓநாயைப் பற்றிக் கூறியது. கவனமாக இருங்கள். ஓநாய் ஏமாற்றி உங்களைச் சாப்பிட்டு விடும். இந்தப் புல் தரையை விட்ட வேறெங்கும் செல்ல வேண்டாம். இந்த இடமே எமக்குப் பாதுகாப்பானது எனப் புத்திமதி கூறியது.
மறுநாள் இரண்டு குட்டிகளும் வெளியே புல் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது சிறிய குட்டி வெளியே சென்று புல் மேய்ந்தால் நன்றாக இருக்கும் என்றது. அந்தப் பக்கம் புற்கள் பச்சைப் பசேலென உள்ளது. வெளியே போய் புல் மேய்வோம் என மற்றைய ஆட்டுக்குட்டியையும் அழைத்தது. மற்றைய ஆட்டுக்குட்டியோ அது ஆபத்தானது என அம்மா கூறியுள்ளார். நாம் அங்கு போனால் ஓநாய் பிடித்து விடும் எனக் கூறியது.
சிறியகுட்டியோ அவற்றை எல்லாம் கேட்காமல் வெளியே போனது. மற்றைய குட்டி தாயிடம் ஓடிச் சென்று நடந்ததைக் கூறியது. அதற்குள் ஓநாய் சிறிய ஆட்டுக்குட்டியைக் கண்டு விட்டது. அதனைப் பிடிப்பதற்கு ஓடி வந்தது. குட்டிஆடு பயத்தில் ஓட்டம் பிடித்தது. தாயாடு தனது கூட்டத்தைக் கூட்டிப் பாய்ந்து வந்தது. அதற்குள் ஓநாய் குட்டியின் மீது பாயக் குட்டிஆடு ஓர் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. கூட்டமாக வந்த ஆட்டைக் கண்ட ஓநாய் ஓட்டம் பிடித்தது. கிணற்றில் விழுந்த ஆட்டுக் குட்டியின் கால் முறிந்து வேதனையில் துடித்தது. தாயாடு கத்துவதைக் கேட்ட தோட்டக்காரன் ஓடி வந்து ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றி அதன் காலில் மருந்து கட்டி விட்டான்.
தாயின் சொல் கேட்காததால் வந்த தீங்கைப் புரிந்து கொண்டது ஆட்டுக்குட்டி. அன்றிலிருந்து தாயின் சொல்லைக் கேட்டு சுகமாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தது.