சூரியன் வருவதும் யாராலே – Sang om at naturen er unik
Denne sangen skrevet av en kjent forfatter Namakkal Iramalingam. Sangen handler om at naturen er unik.
சூரியன் வருவதும் யாராலே
சந்திரன் தெரிவதும் எவராலே
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணில் படுவன அவையென்ன!
பேரிடி மின்னல் எதனாலே
பெருமழை பெய்வதும் எவராலே
யார் இதற்கெல்லாம் அதிகாரி
அதை நாம் எண்ணிட வேண்டாமோ!
தண்ணீர் விழுந்ததும் விதையின்றி
தரையில் முளைத்திடும் புல் ஏது
மண்ணில் போட்டது விதை ஒன்று
மரம் செடியாவது யாராலே!
கண்ணில் தெரியா சிசுவை எல்லாம்
கருவில் வளர்ப்பது யார் வேலை
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒரு விசை இருக்குமன்றோ!
எத்தனை மிருகம் எத்தனை மீன்
எத்தனை ஊர்வன பறப்பன பார்
எத்தனை பூச்சிகள் புழவகைகள்
எண்ணத் தொலையா செடி கொடிகள்
எத்தனை நிறங்கள் உருவங்கள்
எல்லா வற்றையும் எண்ணும் கால்
அத்தனையும் தர ஒரு கற்கன்
யாரோ எங்கோ இருப்பது மெய்
அல்லா என்பர் சில பேர்கள்
அறநெறி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன் பரமண்டலத்தில்
வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா நிர்வானம்
என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பலபேசும்
ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே
அந்தப் பொருளை நாம் நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குழவிடுவோம்
எந்த வழியால் எவர் எதனை
எப்படித் தொழுதால் எமக்கென்ன!
நிந்தை பிறரை பேசிடாமல்
நினைவினும் கெடுதல் செய்யாமல்
வர்ணிப்போம் அதை வணங்கிடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்!